கைதிகளின் உயிர் பாதுகாப்பு அரசின் பொறுப்பு - நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தாக்கப்படுவது, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது மற்றும் உயிரிழப்பது போன்ற சம்பவங்களைத் தனித்தனியான சம்பவங்களாகக் கருத முடியாது என்றும், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், தானும் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பால் வாழ்பவர்களும் அரச நிறுவனங்களின் பாதுகாப்பில் தங்கியிருக்கும் மனிதர்களே என்பதைத் தெளிவாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மீகமுவ சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்ததாகவும், மரண விசாரணை அறிக்கைகளின்படி அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டினாலும், 11 பேர் தாக்குதல்களுக்கு உள்ளானதாலும் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன விசாரணை
அத்துடன், குருநாகல் - கொபெய்கனே பகுதியில் 41 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவமும், அரச காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீகமுவ சிறைச்சாலைச் சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை சட்ட மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தீவிர கவனம் செலுத்தி, சுயாதீன விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தின் ஆட்சி தெரிவுசெய்யப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்போது, அதன் அர்த்தம் இல்லாமல் போகிறது. அரசியல் இலாபங்களுக்கு அப்பால் சென்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
ஒருவரின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த முடியும் என்றாலும், வாழ்வதற்கான உரிமை, கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அவரிடமிருந்து பறிக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |