இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை களனி ஆற்றில் வீசிய கொடூரம்: நால்வர் கைது
வெல்லம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை செய்து, அவரது சடலத்தை எரித்த பின்னர் எலும்புத் துண்டுகளை களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி குறித்த இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பின்னர், மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வாகனத் திருத்தும் நிலையம்
விசாரணைகளின்போது, காணாமல் போன இளைஞர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ வத்தை பகுதியில் அமைந்துள்ள வாகனத் திருத்தும் நிலையமொன்றில் வைத்து சிலருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் காணாமல் போனதையடுத்து அவருடன் இருந்தவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி மாபோல கறுப்புப் பாலம் அருகிலும் மஹர பகுதியிலும் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகநபர்கள் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த இளைஞர் கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட வாகனத் திருத்தும் நிலையமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றத்தடயவியல் பிரிவினர்
பின்னர், அவரது சடலம் கிரிந்திவெல காவல் பிரிவுக்குட்பட்ட பாப்பிலியவல பகுதியில் வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் உடல் எச்சங்கள் கொஸ்கம காவல் பிரிவுக்குட்பட்ட ரண்வல பாலம் அருகிலிருந்து களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த நவம்பர் 1ஆம் திகதி பூகொட நீதவான், வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கம்பஹா குற்றத்தடயவியல் பிரிவினர் இணைந்து பாப்பிலியவல பகுதியில் சம்பவ இடப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளின் சுவிட்ச் சாவி, தாயத்து, சில எலும்புத் துண்டுகள் மற்றும் எரிக்கப்பட்ட கூடாரத் துணியின் ஒரு பகுதி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டு வழக்குப் பொருட்களாகப் காவல்துறையினர் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநாளில், ரண்வல பாலம் அருகிலுள்ள களனி ஆற்றிலும் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதற்காக கடற்படையின் சுழியோடிகளின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அகலவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |