பசில் தொடர்பில் பகிரங்கமாக அறிவிப்போம் - சாகர காரியவசம் தகவல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் தினத்தை பகிரங்கமாக அறிவிப்போம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிற வேளையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டே எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
எரிபொருள் விலையேற்றம் குறித்து அன்று குறிப்பிட்ட விடயத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை தலைமைத்துவமாக கொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பொதுன கூட்டணியில் ஒரு சில முரண்பாடுகள் காணப்படுகின்றன.
பல பங்காளி கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. முரண்பாடுகளுக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தையின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.
கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக குறைபாடுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றார்.