காவல்துறை மா அதிபர் தொடர்பான சர்ச்சையான கருத்து! சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காரியவசம், தான் கூறாத விஷயங்களுக்கு தவறான விளக்கம் அளித்து அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேலைத்திட்டம்
தான் கூறிய கருத்துகளைத் திரித்து காட்டி, எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய மிரட்டல்களுக்குத் தான் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமான முடிவையே சந்தித்ததாகவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அதே பாதையில்தான் பயணிக்க முயற்சிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபராக (DIG) நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்பட்டதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், எதிர்காலத்தில் மக்கள் இதற்குச் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |