சதித் திட்டம் தீட்டும் அரச உயர்மட்ட குழு - அம்பலப்படுத்தினார் சஜித்
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வரும் சிரச ஊடக வலையமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்த நிலையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று சட்டத்தரணிகளை அழைத்து சிரச ஊடக வலையமைப்பின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை பறிப்பதற்கான சதித்திட்டமொன்றை தீட்டுவது தொடர்பில் நம்பகமான வகையில் அறியக் கிடைத்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்த நிலையில், சபையில் கூச்சல் குழப்பங்கள் அதிகரித்தன.
சஜித் பிரேமதாச விடுத்த விசேட அறிவிப்பில்,
சிரச ஊடகம் மீது ஏன் இவ்வளவு அச்சம்? அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தும் ஊடகத்தை கட்டுப்படுத்த ஏன் முயல்கின்றீர்கள்? இது பொய்யான விடயமல்ல, அரச தரப்பு சட்டத்தரணிகளை ஒன்றிணைத்து, சிரச தகவல்களை வெளியிடுவதை எவ்வாறு தடுக்க முடியும்? எவ்வாறு அந்த நிறுவனத்தை மூட முடியும் என ஆராய்கின்றனர். ஏ
ன் இந்த கேலிக்குரிய விடயம். நீங்களும் அரசின் சட்டப்பிரிவிடம் இது தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள். இது உண்மை. சிரச மீது கைவைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
சிரசவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்போவது இல்லையென, இந்த அரசாங்கம் இப்போது பொறுப்புடன் கூற வேண்டும். அரசாங்கம் மீண்டும் சிரசவிற்கு குண்டுத்தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதா? என நான் மிகவும் தெளிவாக கேட்கின்றேன். சட்டத்தரணிகளை அழைத்து சிரச ஊடகத்தை ஒடுக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
இந்த நாட்டின் தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ் எந்தவொரு ஊடகத்தையும் முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? நான் பலமுறை கருத்து தெரிவித்துவிட்டேன். எந்தவொரு ஊடகத்தையும் முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
ஏதாவது ஆவணங்கள் இருக்க வேண்டும். அல்லது சட்டம் ஏதாவது இருக்க வேண்டும். வெறுமனே கருத்துக்களை வெளியிட்டு காலத்தை வீணடிக்க வேண்டாம்.
இவ்வாறான ஒரு நாடாளுமன்றம் எங்கு காணப்படுகின்றது. இவர்களுக்கு விளம்பரம் அவசியமாகின்றது. இவர்கள் இதனை சர்வதேசத்திற்கு அறிவிக்கவே இவ்வாறு செயற்படுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஊடகங்களை முடக்குவதற்கு என்றுமே நடவடிக்கை எடுத்ததில்லை. இன்று ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களே இவர்கள் என்றார்.
மீண்டும் கேள்விகளை தொடுத்த சஜித் பிரேமதாச,
நான் இவரிடம் தெளிவாகக் ஒன்றைக் கேட்டேன். தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? அல்லது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்து சிரசவை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது சிரசவின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இது தொடர்பில் பதில் வழங்குங்கள் என்றார்.
இதனால் நாடாளுமன்றில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.