வறுமைக்கு முற்றுப்புள்ளி: சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம்!
வறுமையை ஒழிக்கும் மக்கள் மயமான தேர்தல் விஞ்ஞாபனத்தை தாம் வெளியிட்டிருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள், தொழில் வல்லுனர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூகொட நகரில் இடம்பெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த குழு
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்த நாட்டில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை காணப்படுகின்ற இலஞ்சம், ஊழல், திருட்டு என்பனவற்றை ஒழித்து மக்களை பாதுகாக்கின்ற யுகத்தை எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவோம் என தலதா மாளிகை முன்னிலையில் உறுதிமொழி அளித்திருக்கின்றோம்.
நம்மிடம் ஜனரஞ்சகமான தத்துவமும் திறமையான சிறந்த குழுவும் இருக்கின்றது. விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறியவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களை பலப்படுத்தும் நோக்கில் இந்த விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உடனே இந்த மண்ணுக்கான நிதர்சனத்தை உண்மைப்படுத்துவோம்” என்றார்.
அத்துடன், கௌரவமான நாட்டைக் கட்டி எழுப்புகின்ற "அனைவருக்கும் வெற்றி" விஞ்ஞாபனத்தின் ஊடாக தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி, வறுமையைப் போக்கி, பெருமைமிக்க நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |