ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தற்போதைய கோட்டாபய அரசாங்கம் உருவாக்கிய திரைக்கதை அம்பலத்திற்கு!
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாதம், மதவாதத்தை சமூகத்திற்கு பரப்பி, முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
முல்கிரியாக நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அக்கட்சியின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரச தலைவர் தேர்தல் காலத்தில் கருத்தடை மருத்துவர் என்ற கதையை கையில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் உண்மை நிலைமை தற்போது வெளியில் வந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொய், மோசடி, ஏமாற்று மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஷாபியை இலக்கு வைத்து அரச தலைவர் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய பிரசாரத்தின் உண்மை என்ன என்பது தற்போது வெளியாகி வருகிறது.
மருத்துவர் ஷாபிக்கு செலுத்த வேண்டிய நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் கீழ் நடக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்தடை அறுவை சிகிச்சைக்கு மேலதிகமாக கருத்தடை கொத்து ரொட்டி பற்றியும் பேசினார்கள் நினைவில் இருக்கின்றதா. மக்கள் இந்த பொய்களை நம்பி ஏமாற்றமடைந்தது போதும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.