உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுவரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக அதிபர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அரசியலமைப்புக்கு இணங்க, அதிபர் தேர்தல் ஒன்றை பிற்போடும் அதிகாரம் இல்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது? இதற்கிணங்க, எப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்? எந்தக் காரணத்தினால் இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
2025 வரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக எதனை அடிப்படையாகக் கொண்டு அதிபர் அறிவித்தார்? எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், நிதியில்லை என்றும் பல காரணங்கள் கூறப்பட்டன. தேர்தலை நடத்தினால், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் அழுத்தம் பிரயோகித்தது.
இந்தத் தேர்தலுக்காக எப்போது வேட்புமனுக்கள் கோரப்பட்டன? வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? வேட்புமனு தாக்கல் செய்த அரச அதிகாரிகள், இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். இவர்களின் தொழில் இல்லாது போயுள்ளது. எத்தனை பேருக்கு அரச இவ்வாறு தொழில் இல்லாது போயுள்ளது?
இவர்களின் உரிமை மீறப்பட்டமைக்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்ள வேண்டும்? மீண்டும் இவர்களை எப்போது சேவையில் இணைத்துக் கொள்வீர்கள்? உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? தேர்தலை பிற்போட்டமையால் ஏற்பட்ட நட்டத்திற்கு யார் காரணம்?” என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |