யாழில் பலசரக்கு கடை ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவருக்கு அபராதம்
யாழ்ப்பாணம்(Jaffna) கோண்டாவிலுள்ள பலசரக்கு கடை ஒன்றின் கடை உரிமையாளர், விநியோகஸ்தர், புத்தளத்தினை சேர்ந்த உப்பு கம்பனி உரிமையாளர் ஆகியோரிற்கு தலா 10,000/= வீதம் 30,000/= தண்டப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் (12.03.2024) அன்று கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றில் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அதன்போது விற்பனை செய்யப்பட்ட உப்பில் சந்தேகமடைந்த பொது சுகாதார பரிசோதகர் உப்பில் மாதிரி எடுத்து அதனை அனுராதபுரம் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பகுப்பாய்வு அறிக்கைக்காக அனுப்பி இருந்தார்.
தண்டப்பணம்
பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் நியம அளவினைவிட குறைந்த நிலையில் அயடீனின் அளவு குறித்த உப்பில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடை உரிமையாளர், விநியோகஸ்தர், புத்தளத்தினை சேர்ந்த உப்பு கம்பனி உரிமையாளர் ஆகியோரிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கினை விசாரித்த நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா மூவரிற்கும் தலா 10,000/= வீதம் 30,000/= தண்டம் விதித்துள்ளார்.
அத்துடன் உப்பு தொழிற்சாலையை பரிசோதிப்பதற்கு ஏதுவாக, பரிசோதனை அறிக்கை, நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் உப்பு கம்பனி அமைந்துள்ள பிரதேச சுகாதார திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கி, அது தொடர்பான அறிக்கையை 01.10.2024ம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கி, வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |