உத்தர லங்கா கூட்டமைப்பில் வெடித்தது பிளவு
உத்தர லங்கா கூட்டமைப்பில் இருந்து லங்கா சமசமாஜ கட்சியை நீக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்படுவதாக அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளார்.
கண்டியில் இன்று 28ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலாவது தேர்தல் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை
உத்தர லங்கா கூட்டமைப்பில் உள்ள ஏழு அங்கத்துவக் கட்சிகளில் சமசமாஜக் கட்சியும் ஒன்று என்ற போதிலும், நேற்று (27) நடைபெற்ற உத்தர லங்கா கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் கூட்டத்திற்கு தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் இது உத்தர லங்கா கூட்டணியில் இருந்து தனது கட்சியை நீக்கும் சதி என தாம் நம்புவதாகவும் திஸ்ஸ விதாரண இங்கு தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு தம்மை ஒரு வார்த்தையில் அழைக்கவில்லை எனவும், இன்று கண்டிக்கு வந்த பின்னரே அவ்வாறானதொரு சந்திப்பு இருப்பதாக தமக்கு தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சதிகளில் இருந்து நாட்டை பாதுகாக்க
சமசமாஜக் கட்சி, உத்தர லங்கா கூட்டமைப்பில் பல வேலைகளை செய்து வருவதாகவும், வெளிநாட்டு சதிகளில் இருந்து நாட்டை பாதுகாக்க ஆரம்பம் முதலே பாடுபடுவதாகவும் தெரிவித்த திஸ்ஸ விதாரண, அந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் ஒரு குழுவினர் சதியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் குழுவை உத்தர லங்கா கூட்டில் இருந்து நீக்க வேண்டும்.
எவ்வாறாயினும், உத்தர லங்கா கூட்டமைப்புடனான தனது உறவுகளை தமது கட்சி தொடர்ந்தும் பலப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“உத்தர லங்கா கூட்டமைப்புடன் இணைந்து உருவாக்கப்படும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக நாம் முன்வைத்த பல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இப்படிப் பார்க்கும் போது ஏனைய மாகாணங்களிலும் எமது கட்சி அவ்வாறே வெட்டப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இருந்து மூன்று வேட்பாளர்கள் கூட எமக்கு கிடைக்கவில்லை. சமசமாஜக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாத்தறை மாவட்டத்திலிருந்தும் எமது வேட்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் சம சமாஜ கட்சிக்கு எதிராக சதி நடப்பதையே காட்டுகிறது என மேலும் தெரிவித்தார்.

