தேசிய பாதுகாப்பு பலவீனமானதே புலிகளின் தோற்றத்திற்கு காரணம்! சமல் ராஜபக்ச தகவல்
தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்ட காரணத்தினால் 30வருட கால சிவில் யுத்தமும், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலும் நாட்டில் இடம் பெற்றது என்று நீர்ப்பாசனம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பினை மையப்படுத்தி அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்பதை பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளங்கிக்கொள்ள முடியும்.
தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதால் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் சிவில் யுத்தம் 30 வருட காலம் வரை நீடித்தது. இதனால் இரு தரப்பிலும் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றன.
2005 ஆம் ஆண்டுக்கு பிறகு பாரிய போராட்டத்திற்கு மத்தியில் 30 வருட கால யுத்தம் நிறைவுக் கு கொண்டு வரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கவில்லை. பல்வேறு காரணிகளினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது.
இத்தாக்குதலுக்கு பொறுப்புகூற வேண்டிய நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் குண்டுத்தாக்குதல்கள் இல்லாதொழிக்கப்பட்டன. ஆகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போதும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார், பொலிஸார் பொறுப்புக்களை மீறியுள்ளார்களா என்பது தொடர்பில் துறைசார் மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.