தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இந்திய தேசியக் கட்சி
'ஜோர்ஜ் பெனார்ன்டஸ்' என்ற பெயர் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு பெயர்.
ஈழத் தமிழர்களும் அவர்களது போராட்டமும் பல்வேறு நெருக்கடிகளில் இருந்த சந்தர்ப்பங்களில் எந்தவித அரசியல் எதிபார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு பல வழிகளிலும் உதவிகள் நல்கிய ஒருவர்தான் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் காலஞ்சென்ற ஜோர்ஜ் மத்தியூ பெனார்ண்டஸ் அவர்கள்.
ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் ஈழத் தமிழருக்கு ஆற்றிய உதவிகள் பல வெளியே தெரிந்திருந்தாலும் பல உதவிகள் வெளியே பகிரங்கமாகக் கூற முடியாதவை.
அப்படிப்பட்ட ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட சமதா கட்சி தற்பொழுது ஈழத் தமிழர் விவகாரத்தை தமது கரங்களில் எடுத்துள்ள விடயம், ஈழத் தமிழர் அரசியல் விவகாரம் இந்தியாவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
ஈழத் தமிழர்களின் இன்னல்களை அரசியல் ஆக்காமல், பொதுநல நோக்கோடு முன்னெடுக்க சமதா கட்சி முடிவெடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஏ. கோன் தெரிவித்துள்ளார்.
சமதா கட்சியின் நிறுவனரும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியுமான 'ஜார்ஜ் பெர்னாண்டஸ்' அவர்களின் கனவாகிய 'தமிழ் ஈழம்' அடைந்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் சமதா கட்சி பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், ஈழம் என்றொரு நாடு வேண்டுமென்பதில் சமதா கட்சி உறுதியாக உள்ளதாகவும், அந்தக் கட்சி கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து சமதா கட்சி தலைவர்களின் விருப்பமும் இதுவாகவே இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழர்கள் தனி நாடு ஒன்றை அமைத்துக்கொள்ளும் அனைத்து தகைமைகளையும் தமதாகக் கொண்டவர்கள் என்றும், அதற்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் என்றும் ஒரு பரப்புரையை சமதா கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் மாநில முதல்வர்களை தாம் சந்தித்து வருவதாகவும் கோன் தெரிவித்தார்.
ஈழத் தமிழருக்கு ஆதரவு கோரி இதுவரை கேரளா மற்றும் பிகார் முதலமைச்சர்களை சமதா கட்சியினர் சந்தித்துள்ளதாகவும், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனித் தமிழீழம் அமைக்க ஈழத் தமிழருக்கு உதவும் தமது முயற்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, உதவ் தாக்கரே போன்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் சமதா கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஏ. கோன் தெரிவித்தார்.
