சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்! தமிழரசு மத்திய குழு அதிரடி
பதவி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீக்க முடிவெடுத்தமைக்கான அடிப்படை காரணங்கள்
நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும், தமிழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பௌத்த மயமாக்கப்படும் நிலையில், அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் காணிகளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த அவர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலைமையால் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மூப்புக் காரணமாக உடல் நிலை தளர்வடைந்துள்ள இரா.சம்பந்தன், நாடாளுமன்ற அமர்வுகளில் சீராகக் கலந்துகொள்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவுள்ளது.
இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார். அதனால் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சந்தர்ப்பங்களும் குறைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள குழு
இவை தொடர்பாகக் ஆராயப்பட்டு, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம்,
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா,
- வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.