நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுக்கிறாரா சம்பந்தன்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் (Rajavarothiam Sampanthan), இந்தக் கால கட்டத்தில் நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுக்கமாட்டார் என தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவர் பெற்றுவரும், மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவை எடுக்கக்கூடுமெனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்த விடயம் பரிசீலனை மட்டத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்,
எவ்வித முன்னறிவிப்புமின்றி தொடர்ச்சியாக 03 மாதங்களுக்கு சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தானாக வலுவிழந்துவிடும்.
ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கும் பிரேரணையை முன்வைக்க முடியும். அவ்வாறு செய்தால் தொடர்ச்சியாக விடுமுறை பெறமுடியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பாதுகாக்கப்படும்.
மிக முக்கியமாக புதிய அரசியலமைப்புக்கான பணிகள் உட்பட முக்கியமான இந்தக் கால கட்டத்தில் சம்பந்தனின் வகிபாகம் அவசியம் எனக் கூறியுள்ளார்.