வடக்கு - கிழக்கு மக்களுக்களிடம் சாணக்கியன் எம்.பி விடுத்த கோரிக்கை
வடக்கு - கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாத்திரமே சாதிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ( Rasamanickam Shanakiyan) தெரிவித்துள்ளார்.
மூதூர் - பள்ளிக்குடியிருப்பில் இன்று (28.04.2025) இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சிக்கான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடிய நாங்கள் வேறு வழியில்லாமல் ஜனநாயக ரீதியில் ஒரே இலங்கைக்குள் எமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்கள்
வடக்கு - கிழக்கு பொருத்தமட்டில் எமது கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கும் எமது மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்று சிந்திக்கின்ற கட்சி எமது கட்சி மாத்திரமே.
தேசிய மக்கள் கட்சியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர் இந்த பிரதேசத்திற்கு வந்திருப்பாரா என்பது கூட சந்தேகம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி அமைச்சர் தமக்கு வாக்களித்த மக்களுடைய பிரச்சினைகளை பார்க்காமல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து அங்குள்ள வேட்பாளர்கள் ஆதரித்து பேசுகிறார்.
ஜனாதிபதியின் கட்சி
தமிழ் அரசாங்கம் இருந்தால் மாத்திரமே தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே ஜனாதிபதியின் கட்சியை நாங்கள் தோற்கடித்தவர்கள்.திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காவிட்டிருந்தால் அவர்களால் இந்த மாவட்டத்தில் வெற்றி கொள்ள முடியாது.
தமிழர் தலைநகரில் சிங்கள பேரினவாத கட்சி வென்று இருக்கிறது என்றால் அது எங்களுக்கு அபாயகரமானதாகும்.
எம்.பியின் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களுடைய எண்ணிக்கை 700 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் சிங்கள மக்கள் வாழ்கின்ற மாவட்டத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 200 வீதத்தால் மாத்திரமே அதிகரித்துள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாங்கள்தான் பேச வேண்டும். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தன்னிச்சையாக செயல்படுவோமாக இருந்தால் எதையுமே சாதிக்க முடியாது.இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
