நாடாளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி..!
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி திருமதி சாமரி பிரியங்கா பெரேராவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.
புத்தளம் மாவட்டத்திற்கான பணியை இடையூறு இன்றி தொடர்வதற்காக இந்த விடயத்தை பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பான பிரேரணைக்கு கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல்
நாமல் ராஜபக்ச எம்.பி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் இந்த பிரேரணை முன்வைக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க தெரிவித்தார்.
மகிந்த, பசிலுக்கு அறிவிக்க ஏற்பாடு
இது தொடர்பில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் அறிவிக்கப்பட உள்ளது.
அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த அந்த தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்திருந்த லொகான் ரத்வத்த அந்த பதவியிலிருந்து விலகியுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |