இலங்கையில் வெறிச்சோடியுள்ள கிராமம் - காரணத்தை கண்டுபிடித்த மகிந்த(photo)
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் கடத்தல் காரணமாக அம்பலாந்தோட்டை வலேவத்தை கிராமம் பாழடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கிராமத்தில் வெற்றிகரமாக பயிரிடப்பட்டு வந்த தென்னந்தோப்புகள் மற்றும் பெறுமதிமிக்க மரங்கள் அழிந்து பல வீடுகள் நாசமாகி பல குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் மணல் கடத்தல்காரர்களால் கிராமம் வெறிச்சோடியுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 10, 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட மண் கடத்தலால் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு கிராமத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் நான்கு பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அவர்கள் வலேவத்த கிராமத்திற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கிராமத்தை புனரமைப்பதற்கான பரிந்துரை அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், சுரங்க அனுமதி வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுகளால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களில் அகழ்வு காரணமாக 20, 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அமரவீர தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பொறியியலாளர்கள் மற்றும் அமைச்சின் மேற்பார்வையில் புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதுடன் மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த காணி புனரமைக்கப்படும் என உத்தரவாத வைப்புத் தொகையின் பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


