பாடகர் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை...! நீதிமன்றின் உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீர்ஷனின் பிணை மனு தொடர்பில் யாழ் மேல் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில் பிணை மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனு இன்று (11-06-2026) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
குறித்த விடயத்தைச் சங்கீர்ஷன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேஷன் சங்கீர்ஷனுக்குப் பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும் சங்கீர்ஷன் சார்பில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை
அத்துடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை (12-06-2026) அல்லது எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சங்கீர்ஷனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சங்கீர்ஷன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கிலும் மற்றும் சர்வதேச நாடுகளிலும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |