எங்கள் மீது தவறில்லை! ஆணித்தரமாக கூறும் அரசாங்கம்
தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் அரசாங்கத்தின் தரப்பிலோ அல்லது சுகாதரத்துறையினரின் தரப்பிலோ எவ்வித தாமதங்களும் ஏற்படவில்லையென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்ற போதிலும் எந்த இடத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதென்பதை தெளிவாக கூற மறுகின்றனர்.
எதிர்க்கட்சியினரின் இந்தக் குற்றச்சாட்டை அடியோடு நிராகரிக்கிறேன். கொவிட் தடுப்பூசிகளை கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் அரசாங்கத்தின் தரப்பிலோ அல்லது சுகாதரத்துறையினரின் தரப்பிலோ எவ்வித தாமதங்களும் ஏற்படவில்லையென்பதை ஆணிதரமாக கூறுகிறோம்.
தடுப்பூசிகள் குறித்த பேச்சுகள் கடந்த ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பமாகியிருந்த சந்தர்ப்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளை கொண்டுவருவது குறித்த பேச்சு நடந்ததாக குறிப்பிட்டார்.