மைத்திரியின் அரசியல் வஞ்சகமே காரணம்! சரத் பொன்சேகா சாடல்
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர்களுக்கு தண்டனை வழங்க தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், அது சம்பந்தமாக ஏற்பட்டு வரும் எதிர்ப்பை சமாளிக்க தான் நினைத்தாற்போல் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைது செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களுக்கு நீதியை நிறைவேற்றிக்கொடுக்கும் என்பதை எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நியாயமான விசாரணைகளை நடத்தி அதனுடன் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையோ, வேறு நபர்களையோ கைது செய்வது குறித்து எதிர்க்கட்சி எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாது.
நியாயமான விசாரணை நடத்தப்படுகிறது என்ற எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையில், எந்த வகையிலும் கைதுகளை நியாயப்படுத்த முடியாது. ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரி இன்னும் சுதந்திரமாக இருக்கின்றார்.
தற்போதைய அரசாங்கம் அந்த பிரதான சூத்திரதாரியை கைது செய்யும் என்பதை எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளானமை சம்பந்தமாக அன்றைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி முற்றாக பொறுப்புக் கூற வேண்டும்.
பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அனுபவங்களை கொண்டுள்ள அன்றைய அரசாங்கத்தின் அமைச்சரான என்னிடம் கூட தேசிய பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை கூட முன்னாள் ஜனாதிபதி கேட்டறியவில்லை.
முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்த அரசியல் வஞ்சகமே இதற்கு காரணம் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.