ஹிட்லராக மாற தலைப்படும் சரத் வீரசேகர - ஆளும் கட்சி எம்.பி வெளியிட்ட தகவல்
சிறிலங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர ஹிட்லராக மாறுவதற்கு முயற்சித்து வருவதாக ஆளும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மக்கள் அரசாங்கத்தை விமர்சித்தால் கைது செய்யப்படுவார்கள் என்று கூட சரத் வீரசேகர நாளைய தினம் சட்டமூலத்தை அறிமுகம் செய்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“பிரதமர் மஹிந்த ராஜபக்சவை ஆட்சியைக் கைப்பற்ற முதலாவது கூட்டத்தை நானே நடத்தியிருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் தங்களது மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காக தற்போதுள்ள அமைச்சர்கள் பலரும் தலைமறைவாக இருந்தார்கள்.
இன்று லொஹான் ரத்வத்தவுக்கும், எனக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதாக மொட்டுக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைச்சர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது தவறு என்றால் அதனை தொடர்ந்தும் செய்ய நான் தயார்.
அமைச்சர் சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருக்காவிட்டால் நாட்டில் ஆசிரியர்களின் பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆசிரியர்களையும் தேரர்களையும் தனிமைப்படுத்தலுக்கு இழுத்துச் சென்ற காரணத்தினால் தான் பிரச்சினை ஏற்பட்டது. அவர் இன்று ஹிட்லராக மாற முயற்சிக்கின்றார்.
அரசாங்கத்தின் பிரச்சினைகளை மக்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டத்தை சரத் வீரசேகர நாளை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கலாம். அப்படிப்பட்டவர் தான் சரத் வீரசேகர. சட்டத்தை அவர் வளைக்க முயற்சிக்கின்றார்.
கட்சிக்குள் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் நான் அச்சமடைய மாட்டேன். 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறிய சரத் வீரசேகர மற்றும் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட சாகர காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே முதலாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மொட்டுக்கட்சியிலுள்ள பல உறுப்பினர்கள் எனக்காக குரல் எழுப்பத் தயாராகவே இருக்கின்றனர்” என்றார்.