ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா வான்வெளித் தாக்குதல் - எட்டு பேர் உயிரிழப்பு!
சவுதி அரேபியா ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அராம்கொ எண்ணெய் நிறுவன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்றைய தினம் (26) ஏமனின் சனா மற்றும் ஹொடைடா ஆகிய இரு நகரங்களில் சவுதி கூட்டுப்படைகள் போர் விமானங்கள் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
குறித்த வான்வெளி தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பெண்கள் குழந்தைகள் உட்பட 04 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015 ஆம்ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது.
அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடங்குகின்றது. இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் கொளுந்துவிட்டு எரிந்தன.
இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி அருகே சர்வதேச கார் போட்டிகளில் முதன்மையான பார்முலா 1 கார் போட்டியும் நடைபெறுவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தால் ஜூடா நகரில் நடைபெற விருந்த பார்முலா 1 கார் போட்டி வேறு இடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.