சவூதியில் மீண்டும் எழுந்த ஏவுகணை அச்சுறுத்தல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
சவூதி அரேபியாவின் தென்மேற்கு அஸீர் மாகாணத்தின் தலைநகரான அப்ஹா (Abha City) மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் அந்த அச்சுறுத்தல் தணிந்துவிட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி சிவில் பாதுகாப்பு ஆணையம் இதனை தெரிவித்திருந்தது.
தேசிய அவசரகால முன்கூட்டிய எச்சரிக்கை தளத்தின் (National Early Warning Platform) ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து.
ட்ரோன் தாக்குதல்கள்
செங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள எல்லைப் பிராந்திய நகரங்களை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி அமைப்பினர் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இந்த அவசர எச்சரிக்கை சமிக்ஞைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அப்ஹா நகரம் மற்றும் கமீஸ் முஷைத் (Khamis Mushait) பிராந்தியங்களிலுள்ள பொதுமக்களின் அலைபேசிகளுக்குத் தேசிய அவசரகால எச்சரிக்கை முறைமை மூலம் ஆபத்து குறித்த தகவல்கள் உடனடியாக அனுப்பட்டுள்ளன.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே, சாத்தியமான ஆபத்துத் தணிந்துவிட்டது எனச் சவூதி சிவில் பாதுகாப்புத் துறை தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தது.
உங்கள் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, சிவில் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டல்களைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் தாக்குதல் பகுதிகள் அல்லது இடைமறிப்பு சம்பவங்கள் நடக்கும் இடங்களில் கூடுவதையும் அவற்றை ஒளிப்பதிவு (Filming) செய்வதையும் தவிர்க்கவும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வான் பாதுகாப்புப் படைகளின் இடைமறிப்பு நடவடிக்கைகள் மற்றும் சேதப் பகுதிகளைப் படம்பிடித்து வெளியிடுவது சவூதி சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |