ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: ஆரம்பமாகும் விசாரணை
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் இன்று (03-09-2026) இந்த விசாரணயை ஆரம்பித்துள்ளது.
இந்த மனுக்கள், நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் உட்பட மொத்தம் 14 மனுக்கள் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் சில சரத்துக்கள், மக்களின் இறையாண்மை உட்பட அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூலம் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை கட்டுப்படுத்தப்படும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை ஆதரவு பெறப்படுவதுடன் சர்வசன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |