11 வயது மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமை : பின்னணியில் பல அதிர்ச்சி தகவல்கள்
11 வயது பாடசாலை மாணவனை அவனது உறவினர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கிய நிலையில் காவல்துறையினர் அதனை கண்டுபிடித்துள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய பதினொரு வயதுடைய பாடசாலை மாணவன் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியரின் பணப்பையில் பணம் திருடிய மாணவன்
கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவன் ஒருவன் நேற்று பாடசாலை ஆசிரியர் ஒருவரின் பணப்பையில் இருந்த 1300 ரூபாவை திருடினான். இதன்படி குறித்த பாடசாலையின் அதிபர் மாணவனுக்கு 14 நாட்களுக்கு வகுப்புநடத்த தடை விதித்ததுடன், இது தொடர்பில் காவல்துறை ஊடாக மாணவனை எச்சரிக்குமாறு மாணவனின் தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாணவனின் தாய் மாணவனுடன் முல்லேரியா காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு ஐஸ் போதைப்பொருள் வாங்குவதற்காக பணத்தை திருடியதாக மாணவன் கூறியுள்ளான்.
மாணவனுக்கு பொறி வைத்த 'வெள்ளை மாமா'
அதன்படி, இது குறித்து மாணவனிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது, பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, ஒரு 'வெள்ளை மாமா' தன்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று குடித்துவிட்டு குடிக்கக் கொடுத்ததாக மாணவன் தெரிவித்துள்ளான்.
இதன்படி, முல்லேரிய காவல் நிலைய கட்டளைத் தளபதி, மேற்கு தெற்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் கயங்க மாரப்பன மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோருக்கு அறிவித்துள்ளார். இது மாணவன் தொடர்பான விவகாரம் ஆகையால் விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி விசாரணை நடத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாலியல் வன்புணர்வு
இதனையடுத்து, மாணவனை தடயவியல் அதிகாரியிடம் ஒப்படைத்தபோது, மாணவன் கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு ஆளானது தெரியவந்தது. 'சூது மாமா' தனது நண்பர் மற்றும் இரண்டு நபர்களுடன் சேர்ந்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவன் காவல்துறையில் தெரிவித்துள்ளான்.
முதலில் மாணவனுக்கு இலவசமாக ஐஸ் மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் கழித்து 'ஐஸ் மருந்து தேவை என்றால் பணம் கொண்டு வாருங்கள்' என 'சூது மாமா' மாணவனிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டதாகவும், அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால் ஆசிரியரின் பணப்பையில் இருந்த 1,300 ரூபாயை திருடியதாகவும் மாணவன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான்.
பாட்டியுடன் இருந்த போதும்
தனது தாயும் தந்தையும் வேலை செய்வதால் பாடசாலை நேரம் முடிந்ததும் பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும், பாட்டியுடன் இருந்த போதும் ஐஸ் மருந்தை தந்திரமாக பயன்படுத்தியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளான்.
10 கிராமுக்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 'சூது மாமா' என்பவரை முல்லேரியா காவல்துறையினர் நீதிமன்றத்தில் முற்படுத்தி 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முல்லேரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |