பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையில் மாற்றம்
இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனினும், இம்முறை டீசல் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரித்தால் ஒரு பாடசாலை மாணவருக்கான கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவினால் அதிகரிக்கும் என கூறினார்.
ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதன்படி, குறித்த கட்டண திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |