அரசியலுக்கு பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது : பிரதியமைச்சர் அறிவிப்பு
நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் பாடசாலைகளில் நடைபெற்ற விழாக்களில் கலந்துகொண்ட அடிப்படையில், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கு தடை உள்ளதா என்று அண்மையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பிரதமரின் அறிவித்தல்
இந்த நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு முன்னர் அறிவுறுத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அவ்வாறு எந்த விதியும் விதிக்கப்படவில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பில், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, பாடசாலை விழாக்களுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 9 மணி நேரம் முன்
