எரிபொருள் விலை அதிகரிப்பின் பின் இரகசிய டீல்
எரிபொருள் விநியோக நிறுவனங்களுடன் இரகசிய டீல் வைத்த பின்னர் இலங்கையில் அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
சினோபெக் நிறுவன விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
இரகசிய டீல்
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து எமது மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
நிவாரணம் வழங்குவதாகக் கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிறுவனங்களுடன் இரகசிய டீல் வைத்த பின்னரே அவர்கள் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
தேவையான அளவில் விலையை அதிகரித்து தருகின்றோம். நீங்கள் விரும்பிய விலைக்கு விற்பனை செய்து அதில் எமக்கு பாதியை வழங்குங்கள் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.
அந்தச் சூட்சுமத்தை 24 மணித்தியாலங்களுக்குள் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இது ஊழல் மிகு டீல் ஆகும்.
பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் நண்பர்களின் மற்றும் உறவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது. இவை அனைத்தும் கறுப்பு பணம். மக்களுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் கவலையடைவதில்லை. அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.