19 ஆண்டுகளுக்குப் பிறகு பராக்கிரம சமுத்திரத்திலிருந்து வெளிவந்த சீதை மாளிகை
மகா பராக்கிரமபாகு என்றும் அழைக்கப்படும் முதலாம் பராக்கிரமபாகு, மன்னரின் ஆட்சியில் (1153-1186) கட்டப்பட்ட பிரமாண்டமான நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தில் இருந்து சீதை மாளிகை பகுதி வெளிப்பட்டுள்ளது.
வறண்ட காலநிலை காரணமாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு பராக்கிரம சமுத்திரத்திலிருந்து "சீதா மாளிகையின் இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன.
பொலன்னறுவை இராச்சியத்தில் இருந்து கி.பி 1153 முதல் 1186 வரை ஆட்சி செய்த இலங்கையின் மன்னராக முதலாம் பராக்கிரமபாகு கருதப்படுகிறார்.
பிரமாண்டமான நீர்த்தேக்கம்
பராக்கிரமபாகு மன்னரால் (1153-1186) கட்டப்பட்ட பிரமாண்டமான நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரம், இந்தப் பண்டைய இராச்சியத்தின் ஏராளமான பழங்கால இடிபாடுகளால் சூழப்பட்டுள்ளது.
அவற்றில் மிகவும் முக்கியத்துவம்பெற்ற சீதை மாளிகையின் இடிப்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. பராக்கிரம சமுத்திரம் என்ற பெயர் குறித்த நீர்த்தேக்கத்தின் பிரம்மாண்டத்தையும் பரந்த தன்மையையும் பிரதிபலிக்கிறது.
பராக்கிரம சமுத்திரம் முதலில் ஐந்து பெரிய நீர்த்தேக்கங்களைக் கொண்டிருந்தது. அவை பிரதான அணையின் மீதான அழுத்தத்தைக் குறைக்க சிறிய அணைகளால் பிரிக்கப்பட்டன.
இந்த முதன்மை தொட்டிகளுக்கு நீரை வழங்கவும், அதிகப்படியான தண்ணீரை பெற்றுக்கொள்ளவும் பிரதான தொட்டியைச் சுற்றி பல சிறிய தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
கிழக்கு பகுதி
இந்தப் பரந்த நீர்த்தேக்கத்தின் கிழக்கு பகுதியில் வறண்ட காலங்களில் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டு சிறிய நில பகுதியில் முதலாம் பராக்கிரமபாகுவால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இரண்டு அரண்மனைகளின் இடிபாடுகள் காணப்படுகின்றன.
இதில் ஒன்று மன்னர் நிசங்க மல்லனின் அரண்மனை வளாகத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும், மற்றொன்று, நீர்த்தேக்கத்தின் வேறு பகுதியை ஒட்டி 500 மீட்டர் உள்நோக்கி ஒரு பெரிய அரண்மனையை கொண்டுள்ளது.
இவை கோடைக்கால அரண்மனை என கூறப்படுகிறது. அத்தோடு இந்த அரண்மனைகள் 3 நிலைகளில் கட்டப்பட்ட ஒரு மேடையில் காணப்படுகின்றன. பொதுவாக இந்த அமைப்பானது மேடையின் 2வது நிலை வரை நீரில் மூழ்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும், நீண்ட வறண்ட காலங்களில், நீர் மட்டம் குறைந்து, சில சமயங்களில் பிரதான நிலப்பகுதியுடன் நீருக்குள் மூழ்கியுள்ள பகுதி வெளிப்பட ஆரம்பிக்கின்றது. சுமார் 850+ ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, அடித்தள மேடைக்கு கூடுதலாக இந்த அரண்மனையின் சில சுவர்கள் மற்றும் படிகளின் இடிபாடுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க சீதை மாளிகை வெளிப்பட ஆரம்பித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தக் கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்தததாக வரலாற்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
