பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Asanka Shehan Semasinghe) அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட பொருளாதார நிலைமைகள் காரணமாக நாடு பல்வேறு பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வங்குரோத்து நிலைக்கு ஆளானதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செஹான் சேமசிங்க அறிவிப்பு
நாடும் பொருளாதாரமும் ஸ்திரமாக இருக்கும் போது அதன் பலன்கள் மக்களுக்கே கிடைக்கும் என்பதால் அதனை மக்கள் புரிந்து கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு நாடு என்ற வகையில் மக்கள் செய்த தியாகங்கள் மற்றும் செய்த சாதனைகள் குறித்து மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என தான் நம்புவதாகவும், அதை இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த அரசாங்கத்தினால் பெரும் முயற்சியுடன் கட்டமைக்கப்பட்ட கொள்கை ரீதியான அரசியல் பாதையை மக்கள் நிராகரித்தமையால் விரக்தியடைந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் விவகாரம்
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அரசியல் விவகாரங்களிலிருந்து விலகப் போவதில்லை என்றும், அனுராதபுரம் மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஷெஹான் சேமசிங்க 2020 பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அங்கு அவர் 119,878 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |