மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்திற்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்
ஈழத்தமிழ் ஊடகப்பரப்பின் மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகருமான பிபிசி ஆனந்தி சூரியப்பிரகாசம் மறைவிற்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளது.
ஒன்றியத்தின் செயலாளர் கே. ஜெயந்திரன் கையொப்பமிட்டு அனுதாபச் செய்திக் குறிப்பை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006 ஆம் ஆண்டிற்கான தலைவராக செயற்பட்டிருந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றவர்.
அரசியல் பிரதிநிதிகள்
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 1980 களில் ஆயுதப் போராட்டமாக மாறிய காலகட்டங்களில் பிபிசி தமிழோசை மூலமாக தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் இழைத்த அநீதிகளை துணிச்சலாகவும் ஆதாரங்களோடும் வெளிப்படுத்தியிருந்தார்.
செய்தியாகவும் செய்தி விமர்சனமாகவும் வெளிப்படுத்திய ஆனந்தி பிரபல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த பலரையும் நேர்காணல் செய்திருந்தார்.
குறிப்பாக புவிசார் அரசியல் போட்டிகளினால் ஈழத்தமிழர் அரசியல் நியாயங்கள் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பது பற்றிய கணிப்புகளை ஆனந்தி அப்போதே வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் இலங்கைத்தீவில் வாழும் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் விவகாரங்கள் பற்றியும் ஆனந்தி வேறு பல நேர்காணலில் வெளிப்படுத்தியிருந்தார்.
அரசியலில் நேர்மை
அதேநேரம் தமிழ்தேசிய அரசியலில் நேர்மையான மாற்றுக் காருத்தாளர்களுக்கு ஆனந்தி முக்கியத்துவம் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தி சூரியபிரகாசம், ஆனந்தி அக்கா என்றும் அழைக்கப்பட்டார்.
இவர் 1970களிலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்திருந்தார் பின்னர் 1980 களில் பிபிசி தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார்.
2005 ஆம் ஆண்டு பிபிசி தமிழோசை பணியில் இருந்து ஆனந்தி ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்கள் பற்றிய நியாயங்களை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஈழத்தமிழ்ப் பணி
தனது 24 வயது மகள் லண்டனில் விபத்து ஒன்றில் உயிரிழந்தபோதும் மனம் தளராமல் ஈழத்தமிழ்ப் பணியை அவர் தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.
பாலியல் தொடர்பான கல்வியை பிபிசி தமிழோசையில் 1997 ஆம் ஆண்டு தொடர் நிகழ்ச்சியாக நடத்தியிருந்தார்.
பாலியல் கல்வியும் அது தொடர்பான புரிதலும் இள வயது மாணவர்களுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில் துறைசார்ந்த மருத்துவர்கள் பலரின் ஆலோசனைகளைப் பெற்று அந்த நிகழ்ச்சியை அவர் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாபெரும் பணியாற்றிய மூத்த செய்தியாளர் ஆனந்தி அக்காவின் ஆத்மா சாந்தியடைய தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பிரார்த்திக்கின்றது.
அத்துடன் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கு ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்