ரணிலை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா..! வழங்கப்பட்ட உறுதிமொழி
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு உறுதி அளித்துள்ளார்.
இலங்கையை இன்று காலை வந்தடைந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லுவை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வரவேற்றார்.
வொஷிங்டனில் இருந்து கொழும்பை வந்தடைந்த டொனால்ட் லூ, இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவார் என ஜுலி சங், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெனால்ட் லூ - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு
இந்த நிலையில் அதிபர் செயலகத்தில் வைத்து டெனால்ட் லூ வை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், இதன்போது ஜூலி சங் ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாராட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதற்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த டொனால்ட் லூ, அதிபர் ரணில் விக்ரமசிங்க சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு சகலவிதமான ஆதரவு
இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் டொனால்ட் லூ கூறியுள்ளார்.
