ஐ.எம்.எவ் இலங்கைக்கு பச்சைக்கொடி..! நாளை வருகிறது உத்தியோகபூர்வ அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்
இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) அடிப்படை நிர்வாக மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 03 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையில், அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பாக நேரடியாக தொடர்புடைய நான்கு வட்டாரங்கள் இதனைத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்த உடன்படிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்களை வரை கோரியுள்ளது.
இந்த நிலையில் கடன் இணக்கம் தொடர்பிலான கருத்துக்கான கோரிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தை
இலங்கைக்கு வந்துள்ள, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நேற்று(30) நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை மேலும் ஒருநாள் நீடித்துள்ளதாக சர்வதேச நாணயநிதியம் அறிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்து அறிக்கையை வெளியிடவுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.