செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி
புதிய இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபரான பெண் கொலைக்கு பின்பு மித்தேனிய பகுதியில் இருந்து யாழ்பாணத்திற்கு சென்று அங்கிருந்து ஜே.கே.பாய் என்ற நபரின் உதவியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்போது, செவ்வந்தி சுமார் ரூ.6.5 மில்லியன் செலவழித்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மூன்று வாரங்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
பின்னர் பேருந்து மற்றும் தொடருந்து மூலம் தப்பிச் சென்று, 7 நாட்களுக்குப் பிறகு நேபாளத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே நேற்று (13) நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இஷாரா செவ்வந்திக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல வழிவகுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
நான்கு நாட்களுக்கு முன்னர் நேபாளத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலமாகவே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவ்வந்தி நீண்ட காலமாக தலைமறைவில் இருந்து வந்தார்.
காவல்துறையினரின் தேடுதல்
சந்தேகநபரான பெண்ணை கைது செய்ய நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர் மறைந்திருப்பதாகக் கூறப்படும் பல இடங்களில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தியிருந்தனர்.
இதுபோன்ற விசாரணைகள் இருந்தபோதிலும், காவல்துறையினரால் செவ்வந்தியை கைது செய்ய முடியாது இருந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது நேபாளத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வந்தியின் கைது
இவ்வாறானதொரு பின்னணியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் நேபாள காவல்துறை இணைந்து சந்தேகநபரான செவ்வந்தியை கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
இதேவேளை, இஷாரா செவந்தியுடன் மேலும் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
