நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்
மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் (Shanakiyan Rasamanickam) தனி உறுப்பினர் முன்மொழிவாக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதாவது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள தடைகளை நீக்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலம்
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக இராசமாணிக்கம் சாணக்கியனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தைத் திருத்தும் வகையில் தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றில் இவ்வாறானதொரு சட்டமூலத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள சட்டமூலம் அங்கீகரிக்கப்படுமாயின் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்படும் என சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
