நசீர் அஹமட் விடுத்த பகிரங்க சவாலை ஏற்றுக்கொண்ட சாணக்கியன்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நசீர் அஹமட் விடுத்த பகிரங்க சவாலை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே சணக்கியன் இந்த சவாலை ஏற்பதாக அறிவிப்பு விடுத்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பகிரங்க வெளியில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.