தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட வழக்கில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு (Deshabandu Tennakoon) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதே இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது கட்சிக்காரரை வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய சதி நடப்பதாகவும், எந்த நேரத்திலும் இந்த குற்றத்தை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கொலை செய்ய சதி
முன்னாள் இரகசிய காவல்துறை பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மனுவில் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் (Deshabandu Tennakoon), தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பிரதிவாதிகளை எதிர்வரும் 09ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது கட்சிகாரருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, பாதுகாப்பை அதிகரித்து அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
