அனுமதி கொடுக்கப்பட்டது ஏன்? இராணுவ தளபதி விளக்கம்
அத்தியாவசிய தேவைகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி காரணமாக கொவிட் நிலைமை பாரதூரமானதாகும் என்று நாம் எண்ணவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்பதற்காகவே வாகன போக்குவரத்திற்கு வரையறுக்கப்படளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு பொதுப்போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே அதிகளவில் வாகனங்கள் வருவதால் கொவிட் நிலைமை பாரதூரமானதாகும் என்று நாம் எண்ணவில்லை. காரணம் தற்போது கொழும்பிற்குள் பிரவேசிப்பவை தனி வாகனங்களாகவே உள்ளன. அதில் பயணிக்கும் நபர்கள் பெருமளவான மக்களுடன் தொடர்பைப் பேணுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். இதன் மூலம் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை
எனினும், முன்னெடுக்கப்பட்டுள்ள சகல நடவடிக்கைகளும் நூறு வீதம் சரியானவை என்றும் கூற முடியாது. சில இடங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கக் கூடும்.
இந்நிலையில், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். குறிப்பாக தற்போது ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக் கொள்பவர்களுக்காக மாத்திரம் விசேட போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்பவர்களை உரிய வங்கிகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.