எதிர்க்கட்சியின் இரு முக்கிய புள்ளிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை வாரி வழங்கிய ஷிரான் பாசிக்
எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணத்தை செலவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கொழும்பு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை நிர்மாணிப்பதற்கு பணத்தை செலவிட்டு கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியதாகவும், தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்கரையில் 5 சொகுசு ஹோட்டல்களை நிர்மாணித்துள்ளதாகவும் அவர் விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட பணம் எவ்வளவு என்பது இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை என விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கை
மேலும் ஒரு அரசியல்வாதியின் தேர்தல் பிரசாரத்திற்காக 50 பேருந்துகளையும் வழங்கியதுடன், மேலும் பெருமளவு பணமும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பணத்தைப் பெற்று தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு அரசியல்வாதிகளிடமும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு ஷிரான் பாசிக்கிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் களுத்துறை பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தனக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 5 முன்னணி ஹோட்டல்கள் குறித்தும் ஷிரான் பாசிக் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த ஹோட்டல்கள் தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முன்னணி ஹோட்டல்கள் என தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சோல் பீச் ஹோட்டலும் தனக்குச் சொந்தமானது என்றும், அதற்கான பணத்தைத் தானே செலவிட்டதாகவும் ஷிரான் பாசிக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள்
அத்துடன், பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை ஷிரான் பாசிக் பணத்தை முதலீடு செய்து நிர்மாணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் சம்பாதிக்கப்பட்ட சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றும் நோக்கில் இந்த வணிகங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷிரான் பாசிக் கடற்கரைப் பகுதியில் நிர்மாணித்துள்ள ஹோட்டல்கள் வேறு நபர்களின் பெயர்களில் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அத்தோடு கடற்கரைப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் ஏழை மக்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஹோட்டல்களை நிர்மாணித்து அவற்றை நடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களில்கூட ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்து, சட்டவிரோதமான வழிகளில் அவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியில் செயல்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுமான அல்டோ தர்மே, படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்களும் தனது போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் ஷிரான் பாசிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |