ஒரே நாளில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள தாய் மற்றும் தனயன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான ஷிரந்தி ராஜபக்சவும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும்,நாளை மறுதினம் 13ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சிரிலிய கணக்கு தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு, கொழும்பு எண். 03 நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படும் என்றும், ஷிரந்தி ராஜபக்சவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லட்சும பிரேமரத்ன உத்தரவிட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்பாக விசாரிக்கப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்சவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி,நாமல் ராஜபக்சவும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்சவும் 13ஆம் திகதியன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |