இந்திய பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி சம்பவம்: 6 வயது சிறுமியை செங்கல்லால் தாக்கிய 3ஆம் வகுப்பு மாணவன்
இந்தியா - ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள செக்டர் 20 பகுதியில் அமைந்துள்ள சமஸ்கிருதி பாடசாலையில், 6 வயது மாற்றுத்திறன் கொண்ட வகுப்பு சிறுமி மீது 3ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கற்கள், செங்கல் மற்றும் பூந்தொட்டியால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைவளாகத்திற்குள், பாடசாலைநேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி முதலில் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மயங்கி விழுந்த பிறகும் தாக்குதல்
ஆரம்பத்தில் கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக இந்திய ஊடகங்கள் விளக்கியுள்ளன.

இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி, 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர், சிறுமியின் தந்தை அழைப்பதாகக் கூறி அவரை பாடசாலையின் முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு சிறுமியை முதலில் செங்கல்லால் தாக்கிய அவர், தொடர்ந்து பூந்தொட்டியைக் கொண்டும் தாக்கியமை அங்கிருந்த சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியில், சிறுமி மயங்கி விழுந்த பிறகும் குறித்த மாணவனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றமை காட்டப்படுகிறது.
சிசிரிவி கருவிகள் பொருத்தப்பட்டு, அவை அதிபர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இத்தகைய சம்பவம் எப்படி நடந்தது என சிறுமியின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், சிறுமியைத் தேடி குடும்பத்தினர் பள்ளிக்கு வந்தபோது, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதே மாணவர்தான் அவர்களைச் சிறுமி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாடசாலை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பவத்தை எப்படிக் கவனிக்காமல் விட்டனர் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதா என்றும் சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறிப்பு - சம்பவத்தின் கொடூரத்தைக் கருத்தில் கொண்டு, அதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் செய்தியில் வெளியிடப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |