சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது இஷாலினி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் மருத்துவமனைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தினமும் பதிவாகி வருகின்றன. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் நல மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் தீபல் பெரேரா இது தொடர்பாக கூறுகையில்,
பல்வேறு வகையான சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளான குறைந்தது இரண்டு குழந்தைகளாவது ஒவ்வொரு நாளும் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்படும் சிறுவர்களில் சிலர் எலும்பு முறிவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
16 வயது வரையிலான சிறுவர்களக்கு பாடசாலை கல்வி கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், அந்த வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாத நிலையில் உள்ளனர். குறிப்பாக உடல் மற்றும் மனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுபவர்கள் உள்ளனர் என்றும், இதுபோன்ற சில பதிவுகள் எந்தவொரு பொறுப்புள்ள நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் பாசம் இல்லாமல் அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.