சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து சுமார் 4,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சுமார் 48,000 தொலைபேசி அழைப்புகள் ஊடாக தகவல்கள் கிடைத்ததாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து 8,165 முறைப்பாடுகள் பதிவானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகங்கள் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 1929 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவை குறித்து தெளிவூட்டும் வகையில் மூன்று புதிய புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.