சஞ்சீவ கொலைக்குப் பழிவாங்கும் முயற்சியே மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு
மினுவாங்கொடையில் (Minuwangoda) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் மீதே நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மினுவாங்கொடை - பத்தடுவன பகுதியில் நேற்று காலை (26.02.2025) 11.00 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் அல்ல என்றாலும், அவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, அவரது நண்பர்கள், கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை
அதன்படி, குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் பகை தீவிரமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 17 மணி நேரம் முன்
