முட்டைக்கு தட்டுப்பாடு - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் நிலவும் முட்டை விலை அதிகரிப்புக்கு தீர்வு காண, அடுத்த மாத நடுப்பகுதியில், முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அதிபர் ரணில் நியமித்த உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் சரத் வீரசேகர எம் பி, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலை,உற்பத்தி விலையை விடவும் குறைவாக உள்ளதாலேயே , முட்டைக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக் காட்டினார். முட்டைக்கான உற்பத்தி செலவு 46 ரூபாவாக இருக்கையில், கட்டுப்பாட்டு விலை 43 ரூபாவாக உள்ளது. இதனால், முட்டை உற்பத்தியாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அடுத்த மாத நடுப்பகுதியில், முட்டையை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
முட்டையை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேகர எம்பி, எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவுப் பொருட்கள் கொள்கைக்கிணங்க 53 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு முட்டையை விற்பனை செய்ய முடியாத நிலையிலும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு முட்டை வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இலட்சக்கணக்கில் தண்டப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உணவு பாதுகாப்புக் குழு
உணவு பாதுகாப்புக் குழு என்ற வகையில், நாம் அவர்களை அறிவுறுத்தியிருந்தும் அவர்கள் அதனை பொருட்படுத்தாது செயற்பட்டு வரு கின்றனர். இதனால் முட்டை உற்பத்தியாளர் கள் மற்றும் முட்டை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். முட்டைக்கான உற்பத்தி செலவு அதிகரித்து கட்டுப்பாட்டு விலை அதனை விட குறைவாக காணப்படுவதால், முட்டை உற்பத்தித்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை இந்தியா, அமெரிக்கா உட்பட உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்படுமானால் பால் மா, பருப்பு,பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் பெரும் நெருக்கடி நிலை ஏற்படும்.அது தொடர்பில் நாம் எம்மை தயார் படுத்திக் கொள்வது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
