வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறை - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
நாட்டின் சில மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவிட்டுள்ளார்
மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் விநியோக பொறிமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை
மருத்துவமனைகளுக்கு மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்கனவே திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை உறுதி செய்வதில் அனைவரும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோக பொறிமுறையை சரிபடுத்தி பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இல்லாமல் மக்களுக்கு மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலைமை ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதற்குத் தேவையான நீண்டகால திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
