மக்களுக்கு அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட அமைச்சர்
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை சொல்வதற்கு தயக்கமாக இருந்தாலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என இணை அமைச்சரவைப் பேச்சாளரும் எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய கால வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாம் கொமிஷனுக்கு பெற்றுக் கொண்டதன் காரணமாகவே அதனை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். எரிபொருளை பெற்றுக்கொள்ள ஒருவரை சுட்டிக்காட்டினால் அவரிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளத் தயார் எனவும் இல்லையேல் எதிர்க்கட்சித் தலைவர் பொய் கூறியமைக்காக நாட்டிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவினம் அதிகமாக இருப்பதால் எரிவாயு உள்ளிட்ட சில பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சுற்றுலா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருமானம் குறைந்து வருவதால் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.