உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் செயலால் சிகிரியாவில் அதிகரித்துச் செல்லும் நாய்கள் கூட்டம்
இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமான சிகிரியா(Sigiriya) பாறையின் உச்சியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாக சிகிரியா காணப்படுகின்றது.
இந்நிலையில், சிகிரியா பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள தொல்பொருள் பகுதியில் மட்டும் 120 க்கும் மேற்பட்ட நாய்கள் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
சிகிரியாவை பார்வையிட வரும் சில உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நாய்க்குட்டிகளை கொண்டு வந்து இங்கே கைவிட்டுச் செல்வதால் இப்பிரதேசத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாய்களால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய கலாச்சார நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க கூறுகையில், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கருத்தடை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |