அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இலங்கையின் பிரபல சுற்றுலாத்தளம்!
உலக பாரம்பரிய தளமான சிகிரியாவை பாதிக்கும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
சிகிரியா தற்போது உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் இல்லை என்றாலும், இந்த அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எதிர்காலத்தில் சிகிரியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்குமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள, பாரம்பரிய மதிப்புமிக்க இடமான சிகிரியா, இலங்கையின் அதிசயங்களை ஆரம்ப காலம் முதல் இன்றுவரை உலகிற்கு நிரூபித்த ஒரு சிறந்த சின்னமாகும்.
உலக பாரம்பரிய தளமாக அறிவிப்பு
கி.பி 5 ஆம் நூற்றாண்டில் காசியப்பன் மன்னரால் ஒரு இராச்சியமாகவும் திட்டமிடப்பட்ட நகரமாகவும் மாற்றப்பட்ட சிகிரியா பாறையின் கட்டிடக்கலை, கட்டிடக்கலை அமைப்புகள் மற்றும் சுவரோவியங்கள் உலகின் அவதானத்தை ஈர்த்தன.
சிகிரியாவில் காணப்படும் சிறப்புமிக்க நிர்மாணிப்பாக கண்ணாடிச்சுவர் காணப்படுகின்றதுடன் இதில் எழுத்துருக்கள் மற்றும் இலங்கையின் எழுத்தாக்கத் துறை வரலாற்றின் சிறப்பு இருகின்றது. இது சிகிரியா பற்றிய பல தகவல்களை தெரியப்படுத்துகின்றது.
அத்துடன் சிகிரியாவில் 500 பெண்களின் உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதுடன் சிகிரியா 1982 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் (Unesco) உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, இது மிகப்பெரிய உள்ளூர் மற்றும் சர்வதேச அவதானத்தை ஈர்த்துள்ளது.
எனினும், சிகிரியாவைச் சுற்றி நாளுக்கு நாள் கட்டப்பட்டு வரும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் சிகிரியாவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
