இலங்கை - நேபாளத்துக்கு இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட அமர்வின் ஓரங்கமாக இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவே இவ்வொப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் காத்மண்டுவில் நடைபெற்றது.
விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள்
இதில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இணைந்து இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு இணைத்தலைமை தாங்கினார்.
அதேவேளை இவ்வமர்வில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, கல்வி, பாதுகாப்பு, குடியகல்வு, கலாசாரம், மக்கள் - மக்கள் தொடர்பு என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் பரஸ்பல அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இத்துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கூட்டு ஆணைக்குழு அமர்வில் ஆராயப்பட்டதுடன், அதனை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
பொதுவான சவால்கள்
அதேபோன்று இலங்கையும், நேபாளமும் அங்கத்துவம் வகிக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் கூட்டணிகளின் சமகால நகர்வுகள் தொடர்பில் இங்கு விசேட கவனம்செலுத்தப்பட்டதுடன், பொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களை மேம்படுத்திக்கொள்வதிலும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.
மேலும் இக்கூட்டு ஆணைக்குழு அமர்வுக்கு அப்பால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல் மற்றும் பிரதமர் புஷ்ப கமல் தஹல் ஆகியோரையும் சந்தித்ததுடன், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்தையும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
அதுமாத்திரமன்றி நேபாளத்தைச் சேர்ந்த பிரபல வணிகர்களைச் சந்தித்த அவர், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்களை இனங்கண்டு, அதில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு அழைப்புவிடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |